தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய புரட்சியை உண்டாக்கி, விற்பனையிலும், வாசகர் எண்ணிக்கையிலும் ‘நம்பர் 1’ என்ற நிலையில் இருந்து வரும் ‘தினத்தந்தி’ குழுமத்தில் இருந்து உருவானதே ‘ராணி சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட்’. சுமார் 50 ஆண்டுகளாக ‘ராணி சிண்டிகேட் லிமிடெட்’ ஆக இருந்து படிப்படியாக வளர்ந்து ‘ராணி சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக இது மாற்றப்பட்டது.
உள்ளூர் செய்திகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான செய்திகளும் உண்மைத் தன்மையோடு அனைத்து தமிழர்களின் இல்லங்களிலும் சென்று சேர வேண்டும் என்பதற்காக ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்கள் ‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி, அதில் உச்சம் தொட்ட பின்னர், வார இதழ் ஒன்றையும் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார். அவரது எண்ணத்தை 1962-ம் ஆண்டில் இனிதே நிறைவேற்றினார் அவரின் புதல்வர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். இதற்காக உருவாக்கப்பட்டதே ‘ராணி சிண்டிகேட் லிமிடெட்’ ஆகும்.
வாசகர்கள், விளம்பரதாரர்களின் ஏகோபித்த ஆதரவால் வெகு வேகமாக வளர்ந்த இந்த நிறுவனம் சார்பில் ‘ராணி’ வார இதழ், மாதம் இருமுறை வெளியாகும் ‘ராணி முத்து’ மற்றும் ஆண்டுதோறும் ‘ராணி முத்து காலண்டர்’ என்ற தினசரி நாட்காட்டி போன்றவை வெளிவருகின்றன.
தொடக்ககாலத்தில் இந்த வார இதழுக்கு ‘பெண்மணி’ என்று பெயர் சூட்ட பா. சிவந்தி ஆதித்தனார் முடிவு செய்திருந்தார். ஆனால், அவ்வாறு பெயர் வைத்தால் அது பெண்கள் மட்டும் படிக்கும் பத்திரிகையாகவே இருந்துவிடும் என்று கருதி அந்த எண்ணத்தைக் கைவிட்டார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் இந்த வாரப் பத்திரிகை இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ‘ராணி’ என்று பெயர் சூட்டினார். தொடக்க காலத்தில், அட்டையில் ‘குடும்ப வார வெளியீடு’ என்ற வாசகம் இடம்பெற்றது. பின்நாட்களில் இதுவே ‘குடும்பப் பத்திரிகை’ என்ற வாசகமாக மாறியது. முதலாவது இதழ் 13.5.1962-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போதைய அதன் விலை 13 காசுகள். தொடக்கத்தில் 5 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. வாசகர்களின் மேன்மையான ஆதரவால் 10-வது இதழே 50 ஆயிரம் பிரதிகளாக உயர்ந்தன. மிகக் குறுகிய காலத்தில் 4 லட்சம் பிரதிகளைத் தாண்டி, புதிய சாதனையும் படைத்தது.
‘வாராந்தரி ராணி’ ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த பெரும்பாலான வார இதழ்களும், அளவில் சிறிய தோற்றத்துடன் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், மேலைநாடுகளில் அச்சிடப்படும் வார இதழ்கள் அளவில் பெரியதாக இருப்பது போன்றே ‘வாராந்தரி ராணி’யும் இருக்க வேண்டும் என்று கருதி, தொடக்கம் முதல் இன்று வரை அளவில் பெரியதாகவே ‘ராணி’ இதழ்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல மாநிலங்களிலும் ‘ராணி’ இதழ்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ‘ராணி’ இதழுக்கு பெருவாரியான வாசகர்கள் உள்ளதால், அந்நாடுகளுக்கும் அச்சுப் பிரதிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆரம்ப காலம் முதலே தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பதே ‘ராணி’யின் கொள்கையாக இருந்து வருகிறது. ‘ராணி’ இதழ் படித்து தூய்மையான தமிழ் கற்றுக்கொண்டதாக பிரபலங்கள் பலரும் கூறுவதே இதற்குச் சான்று.‘ராணி’ இதழின் வெள்ளி விழா 1987-ம் ஆண்டு பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. 2012-ல் பொன்விழா கண்டது. நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை ‘ராணி’க்கு உண்டு. அரசியல் பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள், பல்துறை வித்தகர்கள் பலரும் ‘ராணி’ இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
சமூக அக்கறையுடன் தீட்டப்படும் தலையங்கம், அரிய கருத்துக்களைக் கொண்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், சிந்தனையைத் தூண்டும் சீரிய கட்டுரைகள், ஆன்மிகத்தின் சிறப்பைப் பறைசாற்றும் படைப்புகள், அறிவை விசாலமாக்கும் பல்சுவைத் தகவல்கள், மூளைக்கு வேலை, பல்வேறு துறைகளிலும் சாதித்த பிரபலங்களின் நேர்காணல்கள், பலவிதக் கலைகள் மற்றும் கலைஞர்களின் சிறப்பை ஊக்கப்படுத்தும் படைப்புகள், சுவையான சினிமா செய்திகள், எளிமையான சமையல் குறிப்புகள், துல்லியமாகக் கணிக்கப்படும் ராசிபலன்கள் என்று அனைத்துத் தரப்பினரும் விரும்பும் விதம் பல்சுவைப் படைப்புகளை வாரம்தோறும் வெளியிடுவது ‘ராணி’யின் சிறப்பு.
அனைத்துத் தரப்பு வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வண்ணம் இதழின் ஒவ்வொரு பக்கங்களும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்படுகின்றன.
‘ராணி’ வார இதழின் அட்டைப் படத்தில் இடம்பிடிக்க பிரபலங்கள் பலரும் போட்டி போடுவதுண்டு. இவ்வாறு இடம் பெறுவதைக்கூட சிறந்த விருதாகக் கருதுவதே இதற்குக் காரணம். உயர்தரமான படைப்புகள் எளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் மிகக் குறைந்த விலைக்கு ‘ராணி’ அச்சு இதழ்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இணையத்தில் மின் இதழாகவும் ‘ராணி’ வார இதழை படித்து மகிழலாம். ‘ராணி வீக்லி’ (Rani Weekly) யுடியூப் சேனல் வாயிலாகவும் கண்டு ரசிக்கலாம்.
வாசகர்கள் மத்தியில் ‘ராணி’ வார இதழ் பெரிய அளவில் வரவேற்புப் பெற்றதைத் தொடர்ந்து, இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்களுக்கென தனி இதழ் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்து, ‘ராணி முத்து’ எனும் இதழும் கொண்டு வரப்பட்டது. இதன் முதலாவது பதிப்பு 1968-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று வெளிவந்தது. அப்போதைய அதன் விலை 1 ரூபாய். ஏராளமான எழுத்தாளர்களை உச்சத்துக்குக் கொண்ட சென்ற பெருமை ‘ராணி முத்து’வுக்கு உண்டு. 1994-ம் ஆண்டில் ‘ராணி முத்து’ வெள்ளி விழாக் கண்டது.
ஆங்கிலத் தேதி அடிப்படையில் 1 மற்றும் 16-ந் தேதி என மாதந்தோறும் இரண்டு நாவல்களை, வாசகர்களுக்கு விருந்தாகப் படைக்கிறது. ‘ராணி முத்து’! டிஜிட்டல் வடிவிலும் இதைப் படிக்கலாம்.
முழுமையான பஞ்சாங்கக் குறிப்புகள், கோயில் விசேஷங்கள், முக்கிய நாட்கள் என அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ராணி முத்து காலண்டரும் ‘ராணி சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. முதலாவது நாட்காட்டி வெளியீடு நிகழ்ச்சி 1972 டிசம்பர்2-ல் நடைபெற்றது. இல்லத்துக்கு தெய்வாம்சம் சேர்க்கும் விதம் அழகிய முருகன் கடவுள் தோற்றத்துடன் வெளிவரும் இந்த நாட்காட்டிக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் மிகுந்த வரவேற்புக் கிடைத்து வருகிறது. உலகம் முழுவதும் சென்றடையும் பொருட்டு டிஜிட்டல் மூலமாகவும் இந்த நாட்காட்டியை கணினி, செல்போன் மூலம் பார்க்கும் வசதியும் இருக்கிறது.